பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் காவலர்கள் குடியிருப்பு உள்ளது. 1985ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்ட இந்தக் கட்டடத்தில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் குடியிருப்பு, காவலர்கள் குடியிருப்புகள் 50 என 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 30 வருடங்களாக வசித்து வருகின்றனர். பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை, பல்லடம் ஆகிய காவல்நிலையங்களில் பணிபுரிந்த காவலர்கள் இங்கு வசித்தபோது பேருந்து வசதி, பள்ளிகள், கல்லூரி வசதிகள் ஏதுமின்றி சிரமத்துடன் இருந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தக் கட்டடம் முற்றிலும் பழுதடைந்து விட்டதால் 2015 ஆம் ஆண்டு அனைத்து காவலர்களும் வீடுகளை காலி செய்து வாடகை வீட்டில் குடியேறினர். மூன்று ஆண்டுகளாக குடியிருப்பு கட்டடம் இடிக்கப்படமால் இருப்பதால். இந்தக் குடியிருப்புகளுக்குள் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அடையாளம் தெரியாதவர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், மர்ம நபர்களால் இந்தக் குடியிருப்பு பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்கு இரவு நேரங்களில் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
'தங்க வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்துவரும் காவலர்கள், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு காவலர் குடியிருப்பு வீட்டு வசதி வாரியம் சார்பில் புதிய குடியிருப்பு கட்டித் தர வேண்டும்' என்று அபிராமி என்பவர் கோரிக்கை வைத்துள்ளார்