கோவை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி நகர் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் பரிசு தொகுப்பினை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், "முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தமிழக மக்களுக்கு அனைத்து வகையிலும் நல்லாட்சி அளித்து வருகின்றனர். இதனால், மக்கள் அனைவரும் முழுமையாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு குற்ற ஆராய்ச்சியாளராக எப்போதும் குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொண்டிருப்பதால் தமிழக மக்கள் அவர் மீது வெறுப்படைந்து உள்ளார்கள். எதை எடுத்தாலும் முதலமைச்சர் செய்கிற திட்டங்கள் எல்லாம் தான் சொல்லித்தான் செய்கிறார் என்று ஒரு முந்திரிக்கொட்டைத் தனமாக அவர் சொல்வதைப் பார்த்து இவருக்கு ஏதோ மன நோய் ஏற்பட்டுவிட்டதோ என்று மக்கள் என்ன தொடங்கி விட்டார்கள்.
ஒரு நல்ல யோசனையையும் கூறுவதில்லை. காலை முதல் மாலை வரை மைக் முன்னால் நின்றால் ஏதாவது ஒரு புதிய குற்றச்சாட்டை கண்டுபிடித்துவருவதால், இவர் மீது தமிழக மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இவர் நல்லதையே பேச மாட்டாரா என்று நினைக்கக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இவர் சொல்லி எதையும் நிறைவேற்றும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இல்லை.
அவர் கிராமத்து மனிதர், கிராமத்திலிருந்து வந்தவர், தமிழக மக்களுடைய நிலைமையை நன்கு அறிந்தவர். கிளைச் செயலாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர், அமைச்சர், முதலமைச்சர் என இந்த நிலைக்கு படிப்படியாக உயர்ந்தவர். ஆனால் ஸ்டாலினை பொறுத்தவரையிலே கருணாநிதியின் மகன் என்ற ஒரே காரணத்தைக் கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். 2021க்கு பிறகு திமுக தொண்டர்கள் உழைப்பால் தேடி இருக்கிற சொத்துக்களை பாதுகாத்து கொள்ள வேண்டிய பணி ஒன்றுதான் அவர்களுக்கு இருக்குமே தவிர, கோட்டை பக்கமே மக்களை நெருங்க விட மாட்டார்கள்" என்றார்.