கோவை மாவட்டம் பொள்ளாச்சி கடைவீதியில் செயல்பட்டு வரும் சின்ன அண்ணன் ஜுவல்லரி மற்றும் கணபதி ஜூவல் சிட்டி நகைக் கடைகள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் இந்த கடைகளில் செவ்வாய்க்கிழமையன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கடை ஊழியர்களை வெளியே விடாமலும், வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்காமலும் வருமான வரித்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல ஆவணங்களை கைப்பற்றியதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, பொள்ளாச்சி கோட்டாம்பட்டி சுப்பையன் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஈஸ்வரமூர்த்தி என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அதேபோன்று, பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் பகுதியில் ஆயில் மில் நடத்தி வரும் சசிகுமார் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
ஒரே நாளில் பொள்ளாச்சியில் அடுத்தடுத்து எட்டு இடங்களில் வருமான வரி சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.