பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரம் அருகே உள்ள நரிகள்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன். கூலித்தொழிலாளியான இவருக்கு தேவி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.
இந்த நிலையில், மூன்றாவது குழந்தைக்கு கர்ப்பமான தேவி, திங்கட்கிழமையன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அன்று இரவே அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், தேவியிடம் குழந்தையை பார்த்துக்கொள்வதாகக் கூறி பழகியுள்ளார். தேவியும் உறவினர்கள் யாரும் தனக்கு உதவியாக இல்லாததால், அப்பெண்ணிடம் சகஜமாகப் பழகியுள்ளார்.
இதனைப் பயன்படுத்திக்கொண்ட அப்பெண், பிறந்து ஆறு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தாய் தந்தையிடம் இருந்து கடத்திச் சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தேவியும் அவரது கணவர் பாலனும், சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில், சிசிடிவியில் பதிவாகியிருந்த அப்பெண்ணின் புகைப்படத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.