கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் திருப்பூர் மாவட்டம் சேவூர் காவல்நிலையத்தில் முதல்நிலை கவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பிப்ரவரி 26ஆம் தேதி இரவு நேரம் ரோந்து பணியின் போது சககாவலரான சிவக்குமாருடன் ரங்கநாதனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், ரங்கநாதன் தன்னை நள்ளிரவில் நான்கு கிலோமீட்டர் தூரம் நடக்க வைத்ததாக கூறி காவலர் சிவக்குமார் உயர் அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து ரங்கநாதனிடம் அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக ரங்கநாதன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று (மார்ச் 5) காலை ராங்கநாதன் தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக அவரை அன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவலர் ரங்கநாதன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக அன்னூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், பிப்ரவரி 26ஆம் தேதி இரவு மேற்கொண்ட வாகன சோதனையின் போது சக காவலர் சிவக்குமாருக்கும் தனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து தன்னை பழிவாங்கும் நோக்கில் சக காவலர் சிவக்குமார் உடன் பணி புரியும் காவலர்கள் சேர்ந்து உயர் அலுவலரிடம் பொய் புகார் அளித்தால் தற்கொலைக்கு முயன்றதாக ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.