கோவை மாவட்டத்தில் 15 ஆயிரம் அரசு ஊழியர்கள், மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த தொகுதிகளில் தபால் வாக்குப்பதிவு பயிற்சி முகாம் நடைபெற்றது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகள் செலுத்த அந்தந்த பகுதியில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் அவர்களும் வாக்களித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு கோவையில் நேற்று நடைபெற்றது. கோவை பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தபால் வாக்குப்பதிவு மையத்தில் ஏராளமான காவல்துறையினர் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.
இந்த தபால் வாக்குப்பதிவு, தனி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வாக்குகள், தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு மே மாதம் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது எண்ணப்படும். வாக்குகள் அனைத்தும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர்.