கோயம்புத்தூர்: சூலூர் ஒன்றியத்தில் கருமத்தம்பட்டி பேரூராட்சியாக இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதில், நகராட்சி ஆணையாளராக முத்துசாமி என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பயனாளி ஒருவர் வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக நகராட்சி ஆணையாளர் கையெழுத்து வேண்டும் என ஆணையாளர் முத்துசாமியியை அணுகி இருக்கிறார்.
இதற்கு, மின் இணைப்புப் பெற ஆவணங்கள் அனைத்தும் கணினி வாயிலாகவே செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக கையெழுத்து இட்ட படிவம் கொடுக்கப்பட மாட்டாது என ஆணையாளர் தெரிவித்திருக்கிறார். இதற்கு அந்த நபர் அண்மையில் சிலர் இதுபோன்று மின் இணைப்பு பெறப்பட்டிருப்பதாக தெரிவித்தார். கடந்த ஏழு மாதங்களாக கையெழுத்து எதுவும் போடாத நிலையில் எப்படி மின் இணைப்பு பெற்றார்கள் என கேள்வி எழுந்த நிலையில் ஆணையாளர் கையெழுத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி யாரேனும் மின் இணைப்பு பெற்றிருக்கிறார்கள் என மின்சார வாரியத்திற்குச் சென்று விசாரித்தார்.
அப்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தங்கராஜ் என்பவர் 10 வீடுகளுக்கும் ஆணையாளர் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி வீடுகளுக்கு மின் இணைப்பு வாங்கி இருப்பது ஆணையாளருக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இந்த போலி கையெழுத்து தொடர்பாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் நகராட்சி ஆணையாளர் புகார் அளித்திருக்கிறார். அதன், பேரில் வழக்குப்பதிவு செய்த கருமத்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி ஊழியர்கள் கூறுகையில், “கடந்த ஏழு மாதங்களாக மின் இணைப்பு அனைத்தும் இணையதளம் வாயிலாகவே அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் ஆணையாளரின் கையெழுத்து மற்றும் அவருடைய சீலை பயன்படுத்தி சிலர் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மேலும், 20க்கும் மேற்பட்டோருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருக்கலாம் காவல் துறை முழுமையான விசாரணை மேற்கொண்டால் மட்டுமே உண்மையான குற்றவாளிகள் சிக்குவார்கள்” என தெரிவித்தனர்.
மேலும், இதேபோன்று ஆணையாளரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி வேறு ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களா? என்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகராட்சி ஆணையாளர் கையெழுத்தை போலியாக போட்டு முறைகேடுகள் நடைபெற்றுள்ள சம்பவம் கருமத்தம்பட்டி நகராட்சி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:காலாவதியாகாத மாத்திரைகளை தீ வைத்து எரித்த போது விபத்து; அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதி!