கோயம்புத்தூர்: 2017ஆம் ஆண்டு நடந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்குத்தொடர்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் சசிகலாவின் உறவினர் விவேக், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது உறவினர்கள், அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என கிட்டத்தட்ட 230-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.
மேலும், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜன், அவரது உறவினர்கள் குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தினர்.
இதன் ஒரு பகுதியாக இன்று சசிகலா குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவரும், டிடிவி தினகரனின் நண்பருமாகிய நாமக்கல்லைச்சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் தனிப்படை காவல் துறையினர் கோவை காவலர் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
சசிகலா குடும்பத்தில் நெருங்கிய தொடர்பில் உள்ளவர் என்பதால், கோடநாடு பங்களாவுக்குள் சென்று வந்திருப்பார் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. மதியம் ஒரு மணியளவில் ஆஜரான வழக்கறிஞர் செந்திலிடம் தனிப்படை காவல் துறையினர் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ. 92 லட்சம் மோசடி செய்த பலே தம்பதி