கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகேவுள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் மண்டபம் தனியார் குடியிருப்பில் வசித்துவந்தவர் தினேஷ். இவர் மாசாணி அம்மன் கோயில் தேங்காய் பழம் விற்கும் கடையில் பணிபுரிந்துவந்தார். இவர் வசிக்கும் பகுதியில் 15 குடியிருப்புகள் உள்ளன.
இதில் ஒரு வீட்டில் தினேஷின் அக்கா பரமேஸ்வரி வசித்துவருகிறார். கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 19) அப்பகுதியிலுள்ள குழாயில் நீர் பிடிப்பதில் பரமேஸ்வரிக்கும், அதே குடியிருப்பைச் சேர்ந்த அகல்யாவுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்ட தினேஷ், அகல்யா, அவரது தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அகல்யா தனது கணவர் தமிழ்செல்வனிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த தமிழ்செல்வன், தனது நண்பர்களுடன் சேர்ந்து தினேஷை சரமாரியாகத் தாக்கினார்.
இதில், மயக்கமடைந்த தினேஷின் மூக்கில் ரத்தல் வடியத் தொடங்கியது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தினேஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தினேஷ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அவரது உடலை உடற்கூராய்வுக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஏழு பேரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், தலைமறைவாகவுள்ள சிலரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: மத்திய அரசின் இணையதள முகப்பை ஹேக் செய்து ரூ.78 லட்சம் மோசடி: இருவர் கைது