கோயம்புத்தூர்: தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர், கோவை மாநகர பகுதியில் உள்ள ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பாளர் திட்டம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதில், அமைக்கப்பட்டுள்ள மென்பொருள் செயலியில், புகார் கொடுக்க வருபவர்கள் கூறும் தகவல் முறையாக பதிவு செய்யப்படுகிறதா?, புகார் தாரர்கள் கொடுக்கும் மனுவுக்கு தீர்வு காணப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர், கோவை மாநகர பகுதியில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்களை பிடிக்க காரணமாக இருந்த காவல் துறையினர் மற்றும் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கும் நிகழ்ச்சியில் கூடுதல் டிஜிபி சங்கர் கலந்து கொண்டு 41 காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகைகளை வழங்கி பாராட்டினார். இதில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் சந்தீஸ், சிலம்பரசன், சுகன்யா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், “கோவை மாநகரப் பகுதியில் கொலை உள்ளிட்ட சம்பவங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நேற்று (பிப்.11) நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவை என்பது குறித்து கேட்கப்பட்டது. இதில் சிலர் தங்களுக்கு வரவேண்டிய இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்று கூறினார்கள்.
அவற்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாநகரப் பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் நடந்த குண்டு வெடிப்பு தினத்தையொட்டி (பிப்ரவரி-14) அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க 2 டிஐஜி, 4 போலீஸ் சூப்பிரண்டு, 18 உதவி கமிஷனர்கள், 225 கமாண்டோ போலீசார், 100 அதிவிரைவுப்படை போலீசார் உள்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
அவர்கள் பாதுகாப்புப் பணியைத் தொடங்கியுள்ளனர். வாகன சோதனை, வெளிமாநில நபர்கள், லாட்ஜில் தங்கி இருப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அத்துடன் சமூக வலைதளத்தில் பிரச்னைக்குரிய தகவலை யாராவது பதிவேற்றம் செய்கிறார்களா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி - டெல்லி சென்று 5 பேரை கைது செய்த தேனி போலீஸ்!