கோயம்புத்தூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பாத்திரக்கடை நடத்திவந்த இவர் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். மதமாற்றத்தைத் தட்டிக்கேட்டதற்காக ராமலிங்கம் கொலைசெய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக திருவிடைமருதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 13 பேரை கைதுசெய்தனர். இந்த வழக்கு பின்னர் என்.ஐ.ஏ.வுக்கு (NIA - National Investigation Agency) மாற்றம்செய்யப்பட்டது.
மேலும் ஐந்து பேர் வழக்கில் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது. இதையடுத்து என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்து அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தலைமறைவாக உள்ளவர்களைத் தேடிவருகிறது.
தலைமறைவாக உள்ளவர்கள்
- திருபுவனத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா
- கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த அப்துல் மஜீத்
- வடக்கு மாங்குடியைச் சேர்ந்த புர்ஹானுத்தீன்
- திருவிடைமருதுாரைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது
- திருமங்கலக்குடியைச் சேர்ந்த நவுபில் ஹாசன்
இந்நிலையில் ஐந்து பேரின் புகைப்படங்கள், அடையாளங்களைக் குறிப்பிட்டு மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு - கேரளா எல்லையான கோவை மாவட்டம் அத்திக்கடவு, ஆனைகட்டி பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது. தகவல் கொடுக்க வேண்டிய முகவரி, தொலைபேசி எண்கள் ஆகியவையும் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிறையில் கலவரத்தை ஏற்படுத்திய 21 கைதிகள் மீது வழக்குப்பதிவு