மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியைச் சேர்ந்தவர் துரைபாண்டி என்கிற பாண்டி. இவர் மீது மதுரை, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வழக்கு தொடர்பாக நீண்ட நாட்களாக பாண்டியை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், கோவை மாவட்டம் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மில்லில் தனது மனைவியுடன் பாண்டி தங்கியிருப்பதாக கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவலர்கள் மகேந்திரன் மற்றும் பெரியசாமி ஆகியோர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள மில்லுக்கு விசாரணைக்காக சென்றனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பாண்டி, காவலர்களைப் பார்த்தவுடன் மறைந்திருந்து தாக்கிவிட்டு, கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் காயமடைந்த காவலர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இந்நிலையில் தப்பியோடிய பாண்டியின் புகைப்படத்தை காவல் துறையினர் நேற்று வெளியிட்டு தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் பிரபல ரவுடி பினு மீண்டும் கைது!