கோயம்புத்தூர் மாவட்டம் தடாகம் பகுதிகளில் செயல்பட்டு வந்த 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் யானை வழித்தடங்களை மறைத்து கனிம வளங்களை அழிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், நீதிமன்றம் அப்பகுதியில் இயங்கும் செங்கல் சூளைகளுக்கு தடை விதித்தது. இதையடுத்து, அப்பகுதிகளில் தொடர்ந்து சூளைகள் மூடப்பட்டன.
இந்நிலையில், யானை வழிதடங்கள் இல்லாத பகுதிகளை கண்டறிந்து அங்கு செயல்பட்டு வந்த செங்கல் சூலைகளை இயக்க அனுமதி வழங்கக்கோரி, செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பி.ஆர் நடராஜன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கைமனு அளித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர். நடராஜன், ’கரோனா பரவல் அதிரிகரித்துள்ள நிலையில், போதிய அளவில் ஆக்சிஜன் கிடைக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட்ட ஆட்சியர் கவனம் செலுத்த வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறை பல இடங்களில் இருப்பது போல, கோயம்புத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையிலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான அளவு ஆக்சிஜன்களை போர் கால அடிப்படையில் இருப்பு வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் சுட்டிக்காட்டி உள்ளோம். நேற்று சுகாதார செயலாளர் ராதாக்கிருஷ்ணனிடம் பேசியுள்ளோம். கேரளாவில் இருந்து கஞ்சிகோடு என்ற பகுதியில் இருந்து நமக்கு திரவ ஆக்சிஜன் வரும் நிலையில், அதைக் கூடுதலாக கொண்டு வரவும், சேமித்து வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் கேட்டுகொண்டோம்.
கோவை அரசு மருத்துவமனையில் தற்போது தேவையான அளவு ஆக்சிஜன் உள்ளது. இஎஸ்ஐ மருத்துவமனையில் இருக்கும் தட்டுப்பாட்டை தவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளோம். மாவட்ட நிர்வாகம் சூளைகளை நடத்த கூடாது என அறிவிப்பு வெளியிடுள்ள நிலையில், நீதிமன்றம் சில தடை ஆணைகளை 30ஆம் தேதி அளித்துள்ளது.
ஒரு மாத கால அவகாசத்தில் யானை வழித்தடங்களை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.யானை வழிதடங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என நீதிமன்றம் வழிகாட்டி உள்ளது. அதனை அமலாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு நகல்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளோம்’ என்றார்.