பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் இருந்து பாலக்காடு செல்லும் ரோட்டில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது வடுகபாளையம். இப்பகுதி மற்றும் இதனை ஒட்டிய குக்கிராமங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு என பல்வேறு பயன்பாடுகளுக்கும் வடுகபாளையம் வழியாக நகருக்குள் வரும் வழித்தடத்தையே பிரதானமாக பயன்படுத்தி வந்தனர்.
இப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் ரயில்கள் வருகையின் போது அடிக்கடி மூடி திறப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதில் கடந்த அதிமுக ஆட்சியின்போது மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது.
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியின் முக்கிய பிரமுகர், தனியார் கல்லூரி ஒன்றிற்கு சாதகமாக மேம்பாலத்தின் வடிவமைப்பையே ரகசியமாக மாற்றி அமைத்ததாக கூறப்படுகிறது. அதன்படி எங்கும் இல்லாத வகையில் மேம்பாலத்தின் ஒருபுறம் ஒரே தூணுடன் சரிவாகவும், மறுபுறம் 17 தூண்களுடன் சரிவாகவும் வினோதமான முறையில் மேம்பாலம் அமைக்கப்பட்டது.
இது அதிகாரிகளின் தவறு என விளக்கம் கொடுக்கப்பட்டு, தவறுகள் அனைத்தும் அதிகாரிகளின் தலையில் சுமத்தப்பட்டது. அதோடு முறையான அணுகு சாலையோ அல்லது சுரங்க நடைபாதை வசதியோ செய்து கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக வடுகபாளையம் பகுதி தனித்தீவாக தனித்து விடப்பட்டது. இப்பகுதி மக்கள் நகருக்குள் வர சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றிவர வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் வடுகபாளையம் மக்களின் நீண்ட கால கோரிக்கையை பரிசீலித்த நகராட்சி நிர்வாகம், ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது சுரங்க நடைபாதை அமைக்கும் பணியும் துவங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வடுகபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் நிம்மதி அடைந்து ஆளும் கட்சிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி நகராட்சி கவுன்சிலர்களான இந்திராகிரி, உமா மகேஸ்வரி ஆகியோர் கூறுகையில், பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழித்தடம் மறிக்கப்பட்டு பாலம் கட்டப்பட்டது. அப்போது ஆட்சியாளர்கள் பொதுமக்கள் நடந்து செல்லவும் இருசக்கர வாகனங்கள் செல்லவும் வசதியாக சுரங்கம் நடைபாதை அமைத்துக் கொடுத்திருக்கலாம்.
ஆனால் அப்போது மக்களைப் பற்றி கவலைப்படாமல் அலட்சியமாக இருந்து விட்டனர். இதன் காரணமாக இப்பகுதி மக்கள் இதே பகுதியில் உள்ள மற்றொரு ரயில்வே கேட்டை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நிர்வாக வசதிகளுக்காக ரயில்வே நிர்வாகம் அந்த கேட்டையும் விரைவில் மூட உள்ளது. அப்படி அந்த கேட் மூடப்படும் நிலையில் வடுகபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நடந்து செல்லும் தூரத்தில் உள்ள நகரை அடைவதற்கு ஐந்து கிலோ மீட்டர் சுற்றிவர வேண்டிய அவல நிலை ஏற்படும்.
இதுதொடர்பாக பொதுமக்கள் கொடுத்த கோரிக்கையை ஏற்று தற்போதுள்ள நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு சுரங்க நடைபாதை அமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் அப்பணி முடிய சிறு தாமதமாகிறது. அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்து விரைவில் மக்கள் சிரமம் இன்றி நகருக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் எனத் தெரிவித்தனர்.
இது குறித்து நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கூறுகையில், “அத்தியாவசிய தேவைகளுக்காக பாலம் அமைக்கும் போது அதன் இரு புறங்களிலும் வசிக்கும் மக்களின் போக்குவரத்துக்கான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டியது கட்டாயம். ஆனால், கடந்த ஆட்சியில் யாரோ சிலரின் ஆதாயத்திற்காகவும், நாங்களும் பாலம் கட்டினோம் என்கிற சுய விளம்பரத்திற்காகவும் இந்த பாலம் அவசரகதியில் ஏனோ தானோ என்று கட்டப்பட்டு விட்டது.
அதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் நகருக்குள் எளிதில் வந்து செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தற்போது பொதுமக்களின் சிரமத்தை போக்க ரயில்வே நிர்வாகம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரத்தின் வழிகாட்டுதலின்படியும் இப்பணி விரைந்து முடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர் கொலை.. நான்கு பேர் கைது!