கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை, பண்டைய காலம் முதல் தற்போது வரை வரலாற்றுக்கு பெயர் பெற்ற நகரமாகும். இங்குள்ள காரமடை அரங்கநாதர் தேர் திருவிழாவானது கொங்கு மண்டலத்திலேயே மிகவும் பிரசித்து பெற்றதாகும்.
இந்த தேர் திருவிழாவிற்கும் காரமடை கை முறுக்கிற்கும் நெருங்கிய தொடர்பு ஒன்று உள்ளது.
அதாவது தேர்த்திருவிழா நிகழ்ச்சி என்றாலே காரமடை கை முறுக்கு தான். திருவிழா கடைகளில் எது உள்ளதோ இல்லையோ நிச்சயமாக கை முறுக்கு வியாபாரம் படு பிஸியாக இருக்கும். ஏனெனில் அதை தான் மக்கள் அதிகம் விரும்பி வாங்குவார்கள். அந்த அளவிற்கு காரமடை முறுக்கு சுவையாக இருக்கும். இது அனைவரும் அறிந்ததே.
சுவையில் சிறந்த முறுக்கு: ஐந்து தலைமுறையாக பாரம்பரியம்மிக்க செயல்படுத்தப்படும் இந்தத் தொழில், அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லாததால், நாளடைவில் நலிவுற்று போனது. ஆள்கள் பற்றாக்குறையால், தற்போது மூன்று குடும்பத்தினர் மட்டுமே முறுக்கு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய நவீன காலத்தில், அனைத்தும் இயந்திர மயமானாலும், இந்த கை முறுக்கு மட்டும், கைகளால் மட்டுமே செய்யப்படுகிறது.
அரிசிமாவு, கடலைமாவு, மற்றும் மருத்துவ குணம் நிறைந்த எள்ளு, பெருங்காயம், மிளகு ஆகியவற்றை அரைத்து, அதனை நன்கு கையால் வட்ட வட்டமாக, அழகாக வடிவாக்கம் செய்வார்கள். பின்னர் குறிப்பிட்ட வெப்பத்தில் காய்ந்த எண்ணெயில் அதனை பக்குவமாக வேக வைத்து எடுத்து எடைக்கு ஏற்ப சிறிய, பெரிய பாக்கெட்டுகள் விற்பனைக்காக தயார் செய்யப்படுகிறது.
இதனை அடிக்கி வைத்திருக்கும் அழகை பார்ப்பதற்கே, நாவில் எச்சில் ஊரும். காண்பதற்கு கண்ணும், உண்பதற்கு வயிரும் போதாது. அப்படி ஒரு தயாரிப்பு. இப்படி தயாரிக்கப்படும் கை முறுக்கு கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி என பல்வேறு மாவட்டங்களுக்கும், இந்தியாவின் சில பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
அடையாளப்படுத்த கோரிக்கை: இத்தொழிலை பாரம்பரியம் மாறாமலும் நகரின் அடையாளமாகவும் தொடர்ந்து செயலாற்றி வரும் நிலையில், காரமடை கை முறுக்கிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்க தமிழ்நாடு அரசு புவிசார் குறியீடு வழங்கி அதனை நாடு முழுவதும் அடையாளப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுத்துள்ளது.
இதுகுறித்து கோயம்புத்தூர் நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ் கூறுகையில், “பாரம்பரியம் மாறாமலும் நகரின் அடையாளமாகவும் தொடர்ந்து வரும் காரமடை கை முறுக்கிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்க தமிழ்நாடு அரசு புவிசார் குறியீடு வாங்கி, அதனை நாடு முழுவதும் அடையாளப்படுத்த வேண்டும். காரமடை கை முறுக்கிற்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சியின் முதல் நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்றார்.
இயற்கை முறை: இவரைத் தொடர்ந்து நகரமன்ற உறுப்பினர் குருபிரசாத் கூறியதாவது, “இயற்கை முறையில் தயார் செய்யப்படும் காரமடை கை முறுக்கிற்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலும் வரவேற்பு உள்ளதால் அங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தகைய தொழிலுக்கு புவிசார் குறியீடு கிடைத்தால், தொழிலுக்கு உலகளவில் வரவேற்ப்பு கிடைக்கும். இதனால் வேலைவாய்ப்பும் கூடும்” என்றார்.
தற்போது மூன்று குடும்பங்கள் மட்டுமே இதை செய்து வருகின்றன. இந்த நிலை தொடர்ந்தால், காரமடை முறுக்கே இல்லாமல் போய்விடும் என அச்சம் ஏற்படுகிறது. இந்த இக்கட்டான நிலையை மாற்ற அரசு வழிவகுக்குமா?