கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் நுண்கிருமி பரிசோதனை நிலையத்தில் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் நேற்று கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது, மணிகண்டனுக்கு கரோனா தொற்று இருப்பதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில், சந்தேகமடைந்த மணிகண்டன் அவிநாசி சாலையிலுள்ள மற்றொரு ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
அதில், அவருக்கு கரோனா தொற்று இல்லை என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மணிகண்டன், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வடவள்ளி பகுதியில் உள்ள அந்த ஆய்வகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த வடவள்ளி காவல்துறையினர் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், அங்கு ஏற்கெனவே கரோனா இல்லாத சிலருக்கு கரோனா இருப்பதாக சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் வடவள்ளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு காசநோய் தடுப்பு ஊசி மருந்து தயாரிப்பு