கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம், சிக்கதாசபாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பு கோஷங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோஷமிடும் சத்தம் கேட்டு வெளியே வந்த ஆட்சியர் ராசாமணி, கோஷமிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து விசாரித்த போது, சிக்கதாசபாளையத்தில் கடந்த வாரம் நடந்த அரசு நிகழ்ச்சியில், பட்டா இல்லாத மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதில், 30 பட்டாக்கள் வழங்கப்பட்டு, மீதமுள்ள 61 பட்டாக்களை செவ்வாய்க்கிழமை மேட்டுப்பாளையம் தலூகாவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மீதமுள்ள பட்டாக்களை ஒருவர் பெயரில் பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், பட்டா பெறாத மக்கள் ஒன்றிணைந்து ஆட்சியரை சந்திக்க வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.