பொள்ளாச்சி அர்த்தநாரிபாளையத்தில் காட்டுயானையைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காட்டு யானையைப் பிடிக்கும் பணி குறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் மாரிமுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், 'அர்த்தநாரிபாளையத்தில் யானையைப் பிடிக்க இரண்டு இடங்களைத் தேர்வு செய்து வைத்திருந்தோம். ஆனால் தட்பவெப்ப நிலை காரணமாக யானை இதுவரை வனத்திலிருந்து வெளிவரவில்லை. மாவடப்பு , அட்டகட்டி, நவமலை உட்பட பல பகுதிகளில் இருந்து யானையைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
யானை எந்தப் பகுதிக்கு வந்திருக்கின்றது என்ற தகவல் கிடைத்த உடன் அது பிடிக்கப்படும். மருத்துவக் குழுவில் நான்கு மருத்துவர்கள் யானையைப் பிடிக்கத் தயார் நிலையில் இருக்கின்றனர். மயக்க ஊசி செலுத்துவதற்கான சரியான இடம் அமைந்ததும், யானை மீது செலுத்தப்படும்.
விவசாயிகள் அகழிகள் தோண்டுவதற்கும், பராமரிப்பதற்கும் முன் வந்தால் அதற்கு வனத்துறை சார்பில் ஒத்துழைப்பு வழங்கப்படும். யானையைப் பிடிக்கும் வரை அர்த்தநாரிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருப்பவர்கள் இரவு நேரத்தில் குடிசை வீடுகளில் தங்க வேண்டாம். யானையைப் பிடிக்கும் வரை பாதுகாப்பான இடங்களில் தங்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். கான்கிரீட் வீடுகளில் இருப்பவர்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு பத்திரமாக உள்ளே இருக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுப்பாட்டில்களை வைத்து காட்டு யானைகளை விரட்டும் கிராம மக்களின் புது யுக்தி