கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கோவை மாவட்டத்தில் கரோனா வைரஸால் 127 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 26 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
101 நபர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 18 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அந்த பகுதிகளில் இருப்பவர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
கடந்த மூன்று நாள்களாக இரண்டாயிரம் பேருக்கு சோதனை செய்யப்பட்டது. அதில் ஆயிரத்து 800 பேருக்கு முடிவு வந்துள்ளது. இதில் ஒருவருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டது . 210 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன.
ஊரடங்கு நீடிப்பு காலத்தை கோயம்புத்தூர் மக்கள் புரிந்துகொண்டு வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. தினமும் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும். முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்காக இதுவரை 11 கோடி ரூபாய் வந்துள்ளது. நிவாரணப் பொருள்கள் அளவு குறைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும், இது குறித்து மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் கூறியதாவது, “அரசின் விதிமுறைகளை மீறியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை மூன்றாயிரம் பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 3ஆயிரத்து 500 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர் மாநகரில் 33 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணி நேரமும் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் புதியதாக கரோனா பாதிப்பு இல்லை!