கோவை சிங்காநல்லூர் பகுதி நீலிகோணம்பாளையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவலைத் தொடர்ந்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் சக்திவேல் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவலர், தகராறில் ஈடுபட்டுவந்த ஓட்டுநர்களைத் தடுத்து விசாரித்துள்ளார். அப்போது குறுக்கிட்ட இந்து மக்கள் கட்சிப் பிரமுகர் சிவப்பிரகாசம் என்பவர், இதனை நான் பார்த்துக்கொள்கிறேன். காவல்துறை இதில் தலையிட வேண்டாமென ஒருமையில் பேசியுள்ளார்.
இதைத்தொடர்ந்து தலைமைக் காவலர் சக்திவேல் அளித்த புகாரின் அடிப்படையில் காவலரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, தகாத வார்த்தையால் பேசியது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதனிடையே சிவப்பிரகாசம், தலைமைக் காவலர் சக்திவேலை மிரட்டும் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு!