ஆங்கில மோகத்தாலும், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது அரசுப்பள்ளியில் துவங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகளுக்கு பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் தொடங்கப்பட்ட மழலையர் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பள்ளி திறந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் 16 மாணவர்கள் இந்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கியமாக காரணமாக கருதப்படுவது தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் மற்றும் குடும்ப சூழல் கருதி அரசு பள்ளியில் சேர்ப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், "தனியார் பள்ளியில் படிக்க வைக்க லட்சக்கணக்கில் செலவு செய்கிறோம். அதுமட்டுமல்லாமல் காலை, மாலை வேலைகளில் குழந்தைகளை அழைத்துவர பள்ளிக்கு செல்ல வேண்டியிருக்கிறது. மற்ற பணிகள் ஏதும் செய்ய முடிவதில்லை. பள்ளி வாகனங்களுக்கும் அதிக கட்டணம் கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது.
குடும்பத்தின் வருமானத்திற்கேற்ப அரசு பள்ளியில் சேர்ப்பது சிறந்தது. வீட்டின் அருகிலேயே அரசு பள்ளி இருப்பதால் தங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. தனியார் பள்ளிகளில் அதிக பணம் கட்டி படிக்க வைத்தாலும் கல்வியைத் தவிர மற்ற விளையாட்டு உள்ளிட்ட எந்த துறையும் பெரிதாக இருப்பதில்லை. ஆனால் அரசு பள்ளியில் கல்வியோடு அனைத்து திறமைகளையும் வளர்த்துக்கொள்ள முடியும். அரசுப்பள்ளியின் ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கற்றுக் கொடுக்கின்றனர்" என்றனர்.
அரசுப் பள்ளியில் படிப்பது தங்களுக்கு கவுரவ குறைச்சலாக எண்ணிக்கொண்டிருந்த மக்களிடையே அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற மனநிலை வந்துள்ளது வரவேற்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.