கோயம்புத்தூர்: பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள தனியார்ப் பள்ளியில் (PKD மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி) அரசின் 25 சதவிகித இலவச கல்வித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 15 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டனர். தற்போது ஓராண்டு கழித்துத் தேர்வு செய்யப்பட்ட 15 குழந்தைகளில் ஐந்து குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்று கூறி பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்விக் கட்டணம் செலுத்த வலியுறுத்தியுள்ளது.
இல்லை என்றால் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் கூறியதாகத் தெரிகிறது. இதனால் செய்வதறியாத பெற்றோர்கள் பள்ளி முன்பு முற்றுகையிட்டனர். பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் இருவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் பள்ளி நிர்வாகம் தங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இதுவரை மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து எந்த ஒரு ஒப்புதல் கடிதமும் வரவில்லை என்று பெற்றோர்களிடம் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து பெற்றோர்கள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் கேட்டபோது, இது சம்பந்தமாக ஏற்கனவே பள்ளி நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளதாகவும், கண்டுகொள்ளாமல் இருந்தது அவர்கள் தவறு தான் என்று காரணம் சொன்னதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்படி பள்ளி நிர்வாகமும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் மாறி மாறி காரணம் கூறி, எங்கள் பிள்ளைகளின் கல்வி, எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறி ஆகிவிட்டதாக வேதனை தெரிவித்தனர். மேலும் பிள்ளைகளின் படிப்பு தொடர அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும், இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:'பேப்பர் டீ கப் மூலம் பேட்டரி' புதுவை பல்கலை. பேராசிரியர் ஆய்வுக்கு அங்கீகாரம்!