கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் தீத்திபாளையம் மாதேஷ் கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் தனது நண்பர்களான ஆனந்த், பாபு, ரங்கநாதன், ராமசாமி, ரங்கநாதன், சின்னராசு ஆகிய ஆறு பேருடன் ஐயாசாமி கோயில் வனப்பகுதிக்கு காட்டு பன்றியை வேட்டையாடுவதற்காக சென்றுள்ளார்.
அப்போது ஆனந்த் என்பவர் அங்கிருந்த பாறையின் மீது ஏறி விலங்குகளை கண்காணித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கையிலிருந்த நாட்டு துப்பாக்கியின் குண்டுகள், முன்னே சென்றுகொண்டிருந்த அய்யாச்சாமியின் மீது பாய்ந்தது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது உடலை யாருக்கும் தெரியாமல் நண்பர்கள் சேர்ந்து அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால், இது குறித்து தகவலறிந்த பேரூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காவல் துறையினரின் வருகையை கண்ட அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
அவர்களை பின்தொடர்ந்த காவல் துறையினர், ஆனந்த், ராமன் ஆகியோரை மடக்கிப் பிடித்து, அவர்களிடமிருந்த நாட்டு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். பின்னர், அய்யாசாமியின் உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
![கைது செய்யப்பட்ட இருவர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10293318_img.jpg)
தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய நான்கு பேரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு