கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் பெரியகுளத்தில் நேற்று (ஆகஸ்ட் 22) மாலை மூதாட்டி ஒருவர், திடீரென குளத்தில் இறங்கி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கிருந்த முனியப்பன் என்பவர், மூதாட்டியைப் பார்த்து உடனடியாக நீரில் இறங்கி, அந்த மூதாட்டியை கரைக்கு அழைத்து வந்து விசாரித்தார்.
அப்போது அவர் தற்கொலை செய்து கொள்ள குளத்தில் இறங்கியதாகக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அங்கிருந்த நபர்கள், அவரை சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் துறையினர் மூதாட்டியிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரது பெயர் லட்சுமி(82) என்பது தெரிய வந்தது.
மேலும் கணவர், பிள்ளைகள் இறந்துவிட்டநிலையில், சூலூர் அருகே காமநாயக்கன்பாளையத்தில் ஒருவரது வீட்டில் வீட்டு வேலை செய்து வந்ததாகக் கூறியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக வேலை செய்ய முடியாததால், வேலை செய்த வீட்டிலிருந்து வெளியேறி கிடைத்த உணவை உண்டு வந்ததாகவும், வாழப் பிடிக்காததால் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, மூதாட்டியை சமாதானப்படுத்திய காவல் துறையினர், அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்க முடிவு செய்து பல்வேறு இல்லங்களில் விசாரித்தனர். ஆனால், கரோனா தொற்றைக் காரணம்காட்டி, முதியோர் இல்லங்களில் சேர்க்க மறுத்துவிட்ட நிலையில், சூலூர் முதன்மைக் காவலர் ரஞ்சித் தனது சொந்த முயற்சியில் பேரூரில் உள்ள ஒரு காப்பகத்தில் தற்காலிகமாக சேர்த்துள்ளார்.