ஓலா நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வாடகை கார் உரிமையாளர்களிடம் ஒப்பந்த அடிப்படையில், கமிஷன் பணம் கொடுத்து வருகின்றனர். இதில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கார்கள் ஓலா நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓடுகிறது.
அதனை தொடர்ந்து ஓலா நிறுவனம் கமிஷன், போனஸ் தொகையை ஆண்டுதோறும் முறையாக வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி கமிஷன், போனஸ் தொகையை வழங்காமல் ஓலா ஒட்டுநர்களை ஏமாற்றி வருவதாக பல்வேறு புகார்களை மாவட்ட ஆட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்டோரிடம் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்டவர்கள் ஓலாவில் ஒப்பந்த அடிப்படையில் கார் ஓட்டுபவருக்கு உரியத்தொகை வழங்க அறிவுறுத்தியுள்ளனர். அரசு அலுவலர்கள் உத்திரவிட்டும் ஓலா நிறுவனம் ஒப்பந்ததாரர்களுக்கு உரிய தொகையை முறையாக வழங்கவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் கோவையைச் சேர்ந்த ஓலா ஓட்டுநர் பிரசாத், தனது காரை ஓலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஓட்டி வருவதாக தெரிவித்தார். ஓலா நிறுவனம் அறிவித்தபடி கமிஷன், போனஸ் வழங்காமல் இருப்பதாக குற்றம்சாட்டிய அவர், 16 மணிநேரம் காரை ஒட்டினாலும் 100 ரூபாய் மட்டுமே லாபம் கிடைப்பதாகவும், இதை வைத்து குடும்பம் நடத்த முடியாது, என்பதால் ஓலா நிறுவனத்தின் முன்பு தற்கொலை செய்து கொள்வதாக நேற்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து ஆர்.எஸ் புரம் ஓலா அலுவலகம் அருகே, காலை 10 மணிக்கு தற்கொலை செய்ய வந்த பிரசாத்தை ஆர்.எஸ் புரம் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற பிறகு பிரசாத் கூறுகையில், இன்றைக்கு தன்னை காப்பாற்றி விட்டதாகவும், நாளைக்கு நிறைய ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்ய முயலும்போது ஒன்றும் செய்ய முடியாது என்றும், ஓலா நிறுவனத்திடம் இருந்து உரிய கமிஷன், போனஸை வாங்கித் தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: இளைஞர் கொலை: குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல்..!