கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகள் அரசு அலுவலர்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த உழவர் சந்தையில் சுமார் 200 கடைகள் உள்ளன.
இதில் 60 விழுக்காடு கடைகள்தான் விவசாயிகளால் நடத்தப்படுகின்றன. மீதமுள்ள கடைகள் வியாபாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இங்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள உழவர்கள் அடையாள அட்டையுடன் காய்கறி விற்பனை செய்து வருகின்றனர். இவர்களிடம் அலுவர்கள் நாள்தோறும் பணம் வசூலிக்கின்றனர். இதில், பணம் கொடுக்க மறுக்கும் விவசாயிகளுக்கு கடை வழங்க மறுக்கின்றனர். இதனால் கடை நடத்தவிடாமல் தடுக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி சுமித்ரா, “கடந்த 15 ஆண்டுகளாக ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்துவருகிறோம். தற்போது வந்துள்ள உழவர் சந்தையின் நிர்வாக அலுவலர் கண்ணன் என்பவர் தொடர்ந்து லஞசம் கேட்கிறார். ஆனால் நாங்கள் பணம் தர மறுத்ததால் எங்களை காய்கறி சந்தையில் விற்பனை செய்யவிடாமல் தடுத்துவருகிறார். ஊட்டி, நீலகிரி விவசாயிகளை வெளியேற்றும் நோக்கில் அவர் செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ளன காய்கறிகளை சந்தையில் கொட்டிவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவர் தீக்குளிக்க முயற்சி!