கோயம்புத்தூர்: தொழில் நஷ்டம் காரணமாக கழிவுப் பஞ்சுகளில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் ஓ.இ.மில்கள் வரும் 7ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும், தமிழக ஜவுளி தொழில் அழிவுப்பாதையை மாநில அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் ஓ.இ.மில்கள் சங்கமான ஒஸ்மா தலைவர் அருள்மொழி கூறியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட கழிவுப் பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும், ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் இயங்கி வருகின்றன. இந்த ஓ.இ. மில்கள் பருத்தி கழிவிலிருந்து நாள் ஒன்றுக்கு 25 லட்சம் கிலோ கிரே நூல்களும், பிளாஸ்டிக் பாட்டில் பைபர், ஆயுத்த ஆடை நிறுவ பனியன் கட்டிங் கழிவிலிருந்து 15 லட்சம் கலர் நூல் உற்பத்தியும் செய்கின்றன.
பல்வேறு காரணங்களால் இந்த ஓ.இ. மில்கள் கடந்த ஒரு வருடமாக மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளது. ஓ.இ. மில்களுக்கான மூலப்பொருளான கழிவுப் பஞ்சு கடந்த ஒரு வருடமாக வரலாறு காணாத விலையில் விற்று வருகிறது. கடந்த 20 வருட காலமாக பருத்தி விலையில் 60% கழிவுப்பஞ்சு விற்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு கழிவுப்பஞ்சு விலையில் 80% வரை நூற்பாலைகள் விற்றதால் ஓ.இ.மைல்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. கழிவுப் பஞ்சு விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தால் மட்டும் ஓ.இ. மில்களை தொடர்ந்து இயக்க முடியும் என்பதால் ஓ. இ. மில்கள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, செய்தியாளர்களை சந்தித்து ஒஸ்மா தலைவர் அருள்மொழி பேசியதாவது, “கடந்த ஒரு மாதமாக விசைத்தறி காடாதுணி ஏற்றுமதி ஆகாமல் தேக்கம் அடைவதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் துணிக்கு விலை கிடைக்கவில்லை என்றும் 20 எஸ் ஓ. இ.வெப்ட் ரக நூலை கிலோவுக்கு ரூ.140 , வார்ப் ரக நூலை கிலோவுக்கு ரூ.150 என்ற விலையில் கொள்முதல் செய்துள்ளோம. இதனால் ஓ.இ.மில் ரூ.10 முதல் 15 வரை கிலோவுக்கு நஷ்டம் வருகிறது.
கழிவு பஞ்சு விலை தற்போது 97 ரூபாய் கிலோவிற்கு இருக்க வேண்டிய நிலையில், 117 ரூபாய் என பஞ்சாலைகள் விற்பனை செய்கின்றனர். இந்த விலையேற்றம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்கட்டணம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் கூடுதல் நெருக்கடியான சூழலை ஏற்படுத்தியுள்ளது. டன் - ஜவுளி தொழிலில் அங்கமாக உள்ள ஓ.இ.மில்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டியவைகள் குறித்து சில கோரிக்கைகள் முன்வைத்தார்.
அதில் மத்திய அரசு,கழிவு பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டும் எனவும்
கழிவு பஞ்சாலைகளில் உற்பத்தி செய்யும் நூல் அளவீட்டை கண்காணிக்க வழிவகை செய்யம் வகையில் HSN குறியீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாலிஸ்டர், விஸ்கோஸ் ஆகியவற்றிக்கு தரக்கட்டுப்பாட்டு வைப்பதை கைவிட வேண்டும். 11 சதவீத பஞ்சு இறக்குமதி வரியை நீக்க வேண்டும். மத்திய அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதேபோல மாநில அரசு பழைய கட்டணத்திற்கே மின் கட்டணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பீக் ஹவர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். சோலார் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு வரி விதிக்க கூடாது என்று மாநில அரசுக்கான பிரதானமான கோரிக்கையாக முன்வைத்தார். மேலும், தமிழகத்தில் கழிவு பஞ்சாலைகள் நஷ்டத்தில் இயங்கி வருவதால் வரும் நவம்பர் 7 முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை உற்பத்தி நிறுத்தம் செய்கின்றோம்.
சந்தை நிலவரம் சீராகும் வரை உற்பத்தி நிறுத்தத்ததை தொடர திட்டமிட்டு இருப்பதால், இது வரை 50 க்கும் மேற்பட்ட கழிவு பஞ்சாலை மில்கள் விற்பனை செய்து விட்டு தொழிலை விட்டு சென்று விட்டனர். இதனால், 50 சதவீத உற்பத்தி மட்டும் இப்போது கழிவு பஞ்சாலைகளில் உற்பத்தி நடைபெறுகின்றது. தினமும் 40 லட்சம் கிலோ நூல் உற்பத்தி நிறுத்தப்படுவதால் தினமும் 60 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி தினந்தோறும் தடைபடுகிறது.
தீபாவளி பண்டிகைக்கும், உற்பத்தி நிறுத்ததிற்கும் தொடர்பில்லை என தெரிவித்த அவர் விசைத்தறிகளும் போராட்டம் அறிவித்து இருப்பதால், நூல் விற்பனை இருக்காது என்பதால் உற்பத்தி நிறுத்தம் செய்கின்றோம். இந்த உற்பத்தி நிறுத்தம் காரணமாக நேரடியாக ஒரு லட்சம் பேரும், மறைமுகமாக ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்றார்.
மேலும், ஜவுளி பொருட்கள் தேவையான அளவு சந்தையில் இருப்பதால், ஜவுளி விற்பனையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஆடைகள் கிடைப்பதில் எந்தவித பிரச்னை இல்லை. வேஷ்டி, துண்டு, லுங்கி, நைட்டி, ஆகிய குறைந்த விலையிலான பொருட்கள் ஓ.இ. மில்கள் உற்பத்தி செய்யும் நிலையில், சாலையோர சாதாரண மக்கள் விற்பனை என்பது பாதிக்கும் நிலை ஏற்படும்.
கட்டுப்படியாகும் விலைக்கு கழிவுப் பஞ்சு கிடைக்க மத்திய அரசு வழிவகுக்க வேண்டும் என்றும், 115 லிருந்து 85 க்கு வர வேண்டும். ஆனால், கழிவுப் பஞ்சு குறையாததற்கு ஏற்றுமதியே காரணம். மின் கட்டணத்தை தமிழக அரசு குறைக்கவில்லை என்றால், ஓ. இ.மில்கள் மூடப்படும்.
தமிழக முதல்வர் நேரடியாக அழைத்து பேச மறுக்கிறார். தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு என தமிழ்நாடு மின்சார வாரியம் சொன்னாலும், குஜராத், பஞ்சாப், மஹாராஷ்டிராவில் மின் சலுகை மானியமாக வழங்கி, தொழிலை ஊக்குவிக்கின்றனர். குஜராத் 2000 கண்டெய்னர் நூல் ஏற்றுமதி செய்கிறது. ஆனால் தமிழகம் 100 கண்டெய்னர் கூட ஏற்றுமதி செய்வதில்லை. தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்குவதுடன், இருக்கும் தொழில் நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: தீபாவளி எதிரொலி : சென்னை தி.நகரில் குவிந்த மக்கள் கூட்டம்! காணும் இடமெல்லாம் மனிதத் தலைகள்! தீபாவளி வியாபாரம் படுஜோர்!