கோவை அடுத்த சாடிவயல்அடர்ந்த வனப்பகுதிக்குள் குளிர்ந்த சீதோஷண நிலையில் காணப்படும் கோவை குற்றாலம் அருவி தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது.
கோவை குற்றாலம் சிறுவாணி நதியில் அமைந்துள்ள ஓர் அருவியாகும். கோவையிலிருந்து 36 கிமீ தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை எழிலுக்கும், தெளிவான நீரோட்டத்திற்கும் புகழ்பெற்றது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளதால் மாலை 3 மணிக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு இங்கு அனுமதி கிடையாது.
வெயில் காலங்களில் இப்பகுதி நல்ல குளிர்ச்சியான காற்றையும், குளிர்ந்த நீரையும் தருவதால் பொதுமக்கள் சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக விளங்குகிறது. இங்கு மலையின்மிக உயரத்திலிருந்து அதிக அழுத்தத்துடன் நீர் விழுவதால் மக்கள் இங்கு அதிக கவனமுடன் குளிக்க வேண்டியுள்ளது.
இந்த அருவி சிறுவாணி ஆற்றிலிருந்து பிறக்கிறது. இங்கே பலவகையான பறவைகளையும் விலங்குகளையும் ஒருங்கே காண முடியும். இப்பகுதியில் குரங்குகள் நிறைந்து காணப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது இந்த அருவியில் தற்போது நீர்வரத்து குறைந்ததால், வறண்டு காணப்படுகிறது. மேலும் யானைகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்படுகிறது எனவும், மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிப்பது தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.