கோவை: மருதமலை சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பொதுப்பணியாளர் கூட்டுறவு நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 1993ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை தலைவராக இருந்த மோகன்தாஸ், செயலாளராக இருந்த நாகராஜன், துணைத்தலைவராக சுந்தரம், கிளார்க் விஜயக்குமார்(70) ஆகியோர் இணைந்து உறுப்பினர்கள் கடன் வாங்கியதாக போலி கையெழுத்துப் போட்டு 9 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இது குறித்து கோவை கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளராக இருந்த மகேந்திரன் கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் 4 பேர் மீதும் போலீசார் 1995ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை ஜேஎம் 4 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போதே தலைவர் உள்ளிட்ட 3 பேர் இறந்துவிட்டனர்.
கிளார்க் விஜயக்குமார் மீது மட்டும் வழக்கு நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடிக்கப்பட்டு 28 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. மூன்று சட்டப் பிரிவுகளில் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், மொத்தம் 3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரவணபாபு தீர்ப்பளித்தார்.
இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். வழக்கில் மேல்முறையீடு கால அவகாசம் வழங்கி விஜயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: கோவையில் Rozgar Mela திட்டத்தின் மூலம் 91 இளைஞர்களுக்கு பணி ஆணை