கோயம்புத்தூர்: பொள்ளாச்சியை அடுத்த சின்னேரிபாளையம், காளியப்பன்கவுண்டன் புதூர், பெரிய நெகமம் பகுதிகளில் திமுகவின் ’எல்லோரும் நம்முடன்’ இணைய வழி உறுப்பினர் சேர்க்கை நடந்தது. நிகழ்ச்சியை பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.
பின்னர் அதிமுக, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி, திமுகவில் இணைந்தவர்களுக்கு துண்டு அணிவித்து, உறுப்பினர் அட்டைகளை எம்.பி. வழங்கினார். பின்னர் பேசிய அவர், தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசு பல்வேறு துறைகளில் பின்னுக்குத் தள்ளிவிட்டது. எம்.எல்.ஏக்கள், மந்திரிகள் மக்களை மறந்து விட்டு தங்களின் சட்டைப் பையில் பணத்தை நிரப்புவதிலேயே குறியாக இருக்கின்றனர்.
மத்தியில் ஆளும் மோடி அரசிடம் தமிழ்நாட்டை அடமானம் வைத்து, ஆளும் அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோத திட்டங்களுக்கு, திமுக ஆட்சியில் எதிர்ப்பு தீர்மானங்கள் நிறைவேற்றி அவை தடுக்கப்படும். இந்தியாவில் உள்ள விவசாயிகளை பிச்சைக்காரர்களாக மாற்ற மத்திய அரசு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதை எதிர்த்து ஆளுங்கட்சியை திமுக வலியுறுத்தியது, அதற்கு ஆளுங்கட்சியான அதிமுக செவிசாய்க்கவில்லை.
வரும், 2021இல் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராவது உறுதி என தெரிவித்தார். நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தெற்க்கு இளைஞரணி பொறுப்பாளர் சபரி கார்த்திகேயன், சக்கரவர்த்தி, லட்சுமி நாச்சிமுத்து, ராசு என பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க : திமுக தொண்டரை திட்டிய ஆ.ராசா!