தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உடல் உறுப்புகளில் ஏதேனும் செயற்கை உறுப்புகள் (செயற்கை கால், கை) தேவைப்பட்டால் சென்னையில் அரசு மருத்துவமனைக்குச் சென்றுதான் பொருத்தும்படி இருந்தது.
ஆனால் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்ட முட நீக்கியல் துறையில் செயற்கை உறுப்புகள் அனைத்தும் கோவையிலேயே பொருத்திக் கொள்ளலாம் என்று சில மாதங்களுக்கு முன் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
முதலமைச்சர் உத்தரவின்பேரில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவை அரசு மருத்துவமனையில் முட நீக்கியல் துறையில் செயற்கை உறுப்புகள் பொருத்தும் மையத்தை கடந்த 4 மாதங்களுக்கு முன் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து இன்றுவரை மூன்று பேருக்கு செயற்கை கால், கை பொருத்தப்பட்டுள்ளது.
இதனால் கோவை மற்றும் கோவைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள மக்கள் சென்னை வரை செல்ல தேவையிராது, தேவைப்படுவோர் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் மூலமாகவும், கோவைக்கு அருகில் உள்ள கேரளா, கர்நாடகா மாநில மக்கள் பிரதமர் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலமும் பயனடையலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.