மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு இரண்டு நிலையில் நடக்கிறது. தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஆராய்ச்சிப் படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 1,250 ரூபாயும், இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பிற்கு மாதம் 2,000 ரூபாயும், ஆராய்ச்சிப் படிப்பிற்கு பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயிக்கும் கட்டணமும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 851 மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். மாநில அளவில் 514 மையங்களில் இன்று தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 821 மாணவர்கள் எழுதியுள்ளனர்.
14 ஆயிரத்து 30 மாணவர்கள் தேர்வினை எழுத வரவில்லை. காலை 9 மணி முதல் 11 மணி வரை மனத் திறன் தேர்வும், காலை 11.30 மணி முதல் 1.30 மணி வரை படிப்பறிவு தேர்வும் நடத்தப்பட்டது.
மாணவர்கள் ஓஎம்ஆர் ஷீட்டில் வினாக்களுக்கு விடைகளை பூர்த்தி செய்தனர். இதில் மனத்திறன் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு பட்டியல் வெளியீடு!