கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான வேளாண் பொருளாதார சங்கத்தின் 80ஆவது ஆண்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் நடத்தியது. இதில் நபார்டு வங்கியின் தலைவர் ஜி. ஆர்.சிந்தாலா கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "கரோணா காலத்தில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஜிடிபி குறைந்தது. அந்நிலையில் விவசாயம் சிறப்பாக இருந்தது. மக்கள் அனைவருக்கும் உணவு பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் போன்றவை தேவையான அளவு சென்று சேர்ந்தன.
விவசாயத்தில் 2020-21ஆம் ஆண்டில் 15 லட்சம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போதுவரை 12 லட்சம் கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது. 2021-22ஆம் ஆண்டிற்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனை எட்டினால் அனைத்து பெருமைகளும் விவசாயிகளையே சேரும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏற்றுமதியை 30 மில்லியன் டாலரில் இருந்து 100 மில்லியன் டாலராக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது நம்மிடம் பத்தாயிரம் எப்.பி.ஓ.க்கள் செயல்பட்டுவருகிறது. ஆனால் நமக்கு இன்னும் ஒரு லட்சம் தேவைப்படுகிறது. எப்.பி.ஓ.க்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்தால் விவசாயிகள் பெரிதும் பயனடைவர்.
நம் நாட்டில் 86% சிறு மற்றும் குறு விவசாயிகள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் விவசாயம் செய்வதற்கு போதுமான பொருளாதார வசதி இருப்பதில்லை. இதற்காக நான்காயிரத்து 600 உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டுகளில் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் கடன் பெற்று அதனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு நபார்டு வங்கி கை கொடுக்கும்” என்றார்.