கோவை: சோகமோ, மகிழ்ச்சியோ நம்மை ஆசுவாசப் படுத்துவது இசைதான். அந்த வகையில், மக்களை ஆசுவாசப்படுத்தியதில், எஸ்.பி. பாலசுப்ரமணியனுக்கு தனி இடம் உண்டு. எஸ்பிபி, பாடிய பாடல்கள் பெரும்பாலும் இயற்கை அழகை வர்ணித்து இருக்கும்.எஸ்பிபி கரோனா தொற்றுக்கு உள்ளாகும் முன்பு பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியில் கோவிட் தொற்று என்பது பூமியை நாம் துஷ்பிரயோகம் செய்வதற்கு நாம் செலுத்தும் விலை என குறிப்பிட்டிருந்தார். மேலும், இயற்கை அன்னைக்கு நாம் இழைத்த பாதகத்தை தொடராமல், இசைப்பிரியர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார்.
அவரின் அந்த கருத்தை ஏற்று, சிறுதுளி அமைப்பு, கோவை பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியுடன் இணைந்து பச்சாபாளையம், ஆபிசர்ஸ் காலனி வளாகத்தில் எஸ்பிபிக்கு வனம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் 74 ஆண்டுகள் வாழ்ந்ததை நினைவுகூறும் வகையில் 74 மரங்களை உள்ளடக்கிய வனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், சிறப்பு என்னவெனில், இசைக்கருவிகள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் மரங்களின் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. எஸ்பிபி புகழந்து பாடிய கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஸ்தல விருட்சங்கள், அவரது பிறந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தின் சிறப்பு மரமான புன்னை, செம்பகம் இசைக்குறிப்பு வடிவத்தில் நடப்படவுள்ளன. சிறந்த இசைகலைஞருக்கு செலுத்தும் அஞ்சலியாக இது அமையும் என சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஊராட்சிப் பகுதியில், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி, ஆபீசர்ஸ் காலனி அசோசியேசன் ஆகியோர் கூட்டு முயற்சியுடன் எஸ்பிபி வனம் உருவாக்கியுள்ளோம். 1.8 ஏக்கர் பரப்புள்ள இவ்விடத்தில் குழந்தைகள் பூங்கா, நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. இதுகுறித்து செட்டிபாளையம் பச்சாபாளையம் பகுதி மக்கள் கூறுகையில், எஸ்பிபிக்கு இங்கு வனம் அமைக்கப்பட்டது மிகுந்து மகிழ்ச்சியளிக்கிறது. பல கோடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள எஸ்பிபி அவர்களுக்கு தங்கள் பகுதியில் எஸ்பிபி வனம் அமைக்கப்பட்டுள்ளது இந்த கிராமத்திற்கு கிடைத்த பெருமை" என்றார்.
இதையும் படிங்க: எஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டூடியோ தொடங்கி கெளரவித்த டப்பிங் கலைஞர்கள் சங்கம்