தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலுள்ள கிராமங்களில் தைப்பூசத்தை முன்னிட்டு நிலாச்சோறு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக கோவையில் நேற்று ஆவாரம்பாளையம் பகுதியில் பெண்கள் அனைவரும் கூடி கும்மிப்பாட்டு பாடி நிலாச்சோறு திருவிழா நடத்தினர். இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி கும்மியடித்து இரவு முழுவதும் கும்மிப்பாட்டு பாடி நிலாச்சோறு திருவிழாவைக் கொண்டாடினர்.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், ”நிலாச்சோறு திருவிழாவானது தைப்பூசத்தை முன்னிட்டு, தைப்பூசத்திற்கு 7 நாள்களுக்கு முன்பே முருகக் கடவுளை வேண்டி முளைகட்டிய தானியங்கள் வைத்து முளைப்பாரி செய்வோம்.
மேலும் சில உணவுப்பண்டங்கள் செய்து தைப்பூசம் முடிந்த மூன்றாம் நாளில் கும்மியடித்து கடவுள் பாட்டு பாடி சந்திரனுக்கு இந்த உணவினை படைப்பதன் மூலம் அப்பகுதியில் அமைதி நிலவும் என்பது ஐதீகம். இதனால் மாதம் மும்மாரி மழை பெய்யும், விவசாயம் செழிக்கும் என முன்னோர்கள் கூறுவர். இதன் மூலம் தமிழரின் பாரம்பரியத்தை நகர்ப்புறங்களில் உள்ள குழந்தைகள் அனைவரும் தெரிந்து கொள்வர்” என்றனர்.
இதையும் படிங்க: போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் புத்த பிட்சு வேடத்தில் 2 பேர் கைது!