கோவை: காந்திபுரத்தில் பிரதாப் என்பவர் மொபைல் உதிரிபாகங்கள் விற்பனை கடைகளை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
நேற்று (டிசம்பர் 14) மீண்டும் காலை கடைக்கு வந்து பார்த்த போது, ஒரு கடையின் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது பணம் மற்றும் மொபைல் உதிரிபாகங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து காட்டூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவலர்கள், கடையில் இருந்த சிசிடிவி காட்சி பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதை கண்டறிந்தனர்.
அப்போது பொருட்களின் இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்றொரு கடையின் ஹார்ட் டிஸ்கை காவலர்கள் கைப்பற்றினர்.
இதனையடுத்து அதில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு கொள்ளையில் ஈடுபட்டோரை காவலர்கள் தேடி வருகின்றனர். ரூ. 10 லட்சம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் உதிரிபாகங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கர்ப்பத்தை மறைத்த மாணவி - தற்கொலைக்கு முயன்றபோது பிறந்த ஆண் குழந்தை