கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இன்று (மார்ச் 15) கோவை மத்திய மண்டல அலுவலகத்தில் தனது வேட்புமனு தாக்கலைப் பதிவுசெய்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "ஜனநாயகக் கடமையை ஆற்ற அரிய வாய்ப்பைத் தேர்தல் ஆணையம் கொடுத்திருக்கிறது. இது எனது முதல் தேர்தல் களம். எங்களுடைய தேர்தல் வியூகம் என்பது எங்களின் நேர்மைதான். எங்களுடைய நேர்மையையும் திட்டத்தையும் முழுமையாக நம்பியே களம் இறங்குகிறோம்.
இங்கு மதநல்லிணக்கம் இல்லாமல் செய்ய பல்வேறு முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்போம். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவை என்ற புகழ் மங்காமல் இருப்பதற்கான பணிகளை மேற்கொள்வோம்.
தொகுதியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்றித்தருவோம். கோவை மண்டலத்திற்குத் தேவையான விமான விரிவாக்கம் மெட்ரோ ரயில் சேவை போன்றவை செய்யப்படாமல் இருக்கின்றன.
நான் வெளியாள் என்று என்னை யாரும் சொல்ல மாட்டார்கள். நான் தமிழன்தான். கோவையை மையமாக வைத்து எனது பரப்புரை இருக்கும். நடிப்பு எனது தொழில். அரசியல் எங்கள் கடமை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அரசியல் தலைவர்களின் கல்லாப்பெட்டி மக்களின் கஜானாவாக வேண்டும்'- கமல்