கரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிகள் நம்பிக்கையளிக்கும் ஆயுதமாக உள்ளன. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் மையங்களை அதிகப்படுத்த வலியுறுத்தி, சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் ஆகிய இருவரும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தடுப்பூசி மையம்
சிங்காநல்லூர் தொகுதியில் வரதராஜபுத்தில் மட்டும் தான் ஒரே ஒரு தடுப்பூசி போடும் மையம் செயல்பட்டுவருகிறது. அந்தத் தொகுதியில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும், இந்த ஒரு மையம் மட்டுமே போதுமானதல்ல.
எனவே, சிங்காநல்லூர், நீலிக்கோணம்பாளையம், சவுரிபாளையம், நஞ்சுண்டாபுரம், பீளமேடு, பழையூர், ஜெய்சிம்மாபுரம், நெசவாளர் காலனி, மசக்காளிப்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள நகர்நல மருத்துவமனைகள் மற்றும் அம்மா மினி கிளினிக்குகளை தடுப்பூசிப் பணிகளுக்குப் பயன்படுத்த ஆவன செய்யுமாறு சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் மனு அளித்தார்.
அதைப் போலவே, வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மணியகாரம்பாளையம் பகுதியில் மட்டுமே தடுப்பூசி போடப்படுவதாகவும், கல்வீரம்பாளையம், மகாராணி, வி.என்.ஆர் நகர், வீரகேரளம், கே.கே.புதூர், கணபதி, முத்துகுமார் நகர், இரத்தினபுரி, காந்திமாநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தடுப்பூசி போடும் மையங்களை ஏற்படுத்தவும், வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ஜுனனும் மனு அளித்தார்.
இதையும் படிங்க: தளர்வுகளற்ற ஊரடங்கு: இயல்பு நிலையில் இயங்குகிறதா சென்னை?