கோயம்புத்தூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான வானதி சீனிவாசன் அத்தொகுதி மக்கள் அளித்த மனுக்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் புதிய கோரிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
அதன்பின் செய்தியாளரைச் சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது, "புலியகுளம் பகுதியில் உள்ள ரேஷன் கடையை வாரம் முழுவதும் இயக்க வேண்டும். கடந்த நான்கு மாதங்களாக முதியோர் உதவித் தொகை கிடைக்க பெறாதவர்களுக்கு உடனடியாக கிடைக்க பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
தெற்குத் தொகுதிக்குள்பட்ட அங்கன்வாடி மையங்கள் பராமரிப்பு இன்றியும் இட வசதி இன்றியும் இருப்பது உள்ளிட்ட எனது தொகுதி சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்படுள்ளது.
நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் சம்பள பணம் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் கிடைக்கப் பெறும்படி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாகப் பயன் இல்லை எனக் கூறிவிட முடியாது. இதனை மேலும் மேம்படுத்த ஒன்றிய அரசு ஆய்வு மேற்கொள்ளும்" என்றார்.
உத்தரப் பிரதேசத்தில் உழவர் போராட்டத்தில் எட்டு பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு வானதி சீனிவாசன், "அம்மாநிலத்தின் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். பாரபட்சமற்ற நடவடிக்கைகள் இருக்கும்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் வருவதால் செத்துப்போன தனது கட்சிக்கு உயிர் கொடுக்க மக்களுடைய உயிரற்ற உடலை வைத்து அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய நிலை அம்மாநில அரசிற்கு உள்ளது. கலவரம் ஏற்படும் சூழலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அங்குச் செல்கிறார் என்றால் அங்குச் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அம்மாநில அரசுக்கு உள்ளது. சூழலின் தன்மையைக் கருதியே அவர் அனுமதிக்கப்படவில்லை" என்றார்.
இதையும் படிங்க: ரோஸ் என்றும் மல்லிகை ஆகாது - வானதி சீனிவாசனுக்குப் பதிலளித்த பிடிஆர்