தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருச்சபை மக்கள் கலந்துகொள்ளும் மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. அதில் கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள புனித ஜெபமாலை அன்னை திருத்தலம் அருகே ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
இதில், கோயம்புத்தூர் மறை மாவட்டத்தைச் சேர்ந்த புனித மைக்கேல் ஆலய பங்குத்தந்தை ஜார்ஜ் தனசேகர், பிரபஞ்ச அமைதி சேவாசிரமம் நிறுவனர் ஷிவாத்மா, இமாம் ஆசிக் அலி மார்ட்டின் குரூப் நிறுவன தலைவர் லீமாரோஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கிறிஸ்துமஸ் ஆராதனை பாடல்கள் பாடப்பட்டன. தொடர்ந்து இவர்கள் மத்தியில் காணொலி வாயிலாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு வாழ்த்து கூறி சென்னையில் இருந்தபடி உரையாற்றினார். இந்த விழாவில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.