கோயம்புத்தூர்: கோவை உக்கடம் ராமர் கோயில் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் கடந்த மூன்று நாட்களாக கார் ஒன்று நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து நேற்று (நவ. 30) இரவு அந்த காரை பெரிய கடை வீதி காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது காரில் சுத்தியல், கத்தி போன்ற ஆயுதங்களும் ரத்த கறை படிந்த துணிகளும் இருந்ததுடன் அந்த காரில் இருந்து ரத்த வாடையும் வந்துள்ளது. இதனிடையே இன்று (டிச. 1) பிற்பகல் மீண்டும் அந்த காரை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினர். இதனை அடுத்து மோப்பநாய் உதவியுடன் கார் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் போது கார் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து உக்கடம் பேருந்து நிலையம் வரை ஓடிய மோப்ப நாய் பின்னர் நின்றது. இதன் இடையே போலீசார் காரில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து கார் குறித்து மேற்கொண்ட விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம் களத்தூரில் உள்ள அரசு பள்ளி ஆசிரியை தீபா என்பவரும், அதே பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் வெங்கடேஷ் என்பவரும் கடந்த 15ஆம் தேதி முதல் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
மேலும் ஆசிரியை தீபாவினுடைய காரில் அவர்கள் மாயமாகி இருந்த நிலையில், ஆசிரியை தீபாவின் கார் மட்டும் கோவை உக்கடம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட போலீசார் கோவைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இது குறித்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.
இதுமட்டும் அல்லாது காரில் இருந்து ஆசிரியை தீபாவின் தாலி செயின், கொலுசு, ஏடிஎம் கார்டு போன்றவையும் பெரம்பலூர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல ஆசிரியர் வெங்கடேசனின் இரண்டு செல்போன்களும் காரில் இருந்து பெரம்பலூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
காரில் ரத்தம் வடிந்த நிலையில் இருப்பதால் அது குறித்தும் இரு மாவட்ட போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர்கள் இருவரும் காணாமல் போனது குறித்து பெரம்பலூர் மாவட்ட போலீசாரர் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், தொடர்ந்து ஆசிரியை தீபாவின் கார் மட்டும் கிடைக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்தும் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "வெல்கம் ஹோம் யூ பியூட்டி" - நயன்தாராவுக்கு சொகுசு கார் பரிசளித்த விக்னேஷ் சிவன்!