கோயம்புத்தூர்: கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி இல்ல திருமண நிகழ்ச்சி நேற்று (செப் 16) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலந்து கொண்டு மணமக்கள், பிரபாகரன்- இந்துஜா அவர்களை வாழ்த்திச் சிறப்புரையாற்றினர்.
மணமேடையில் மணமக்களை வாழ்த்தி பேசிய உதயநிதி ஸ்டாலின், “ ஒட்டுமொத்த தமிழக மகளிர் அனைவரும் தற்போது முதலமைச்சரை வாழ்த்தி வருகின்றனர் அது உங்களுக்கும் தெரியும். ஆயிரம் ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் மகளிர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நூறு வருடத்துக்கு முன்பாக பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாது. அதை உடைத்து தற்போது மாற்றம் செய்யப்பட்டது தான் திராவிட மாடல் ஆட்சி. ஆட்சி அமைந்து முதல் கையெழுத்து மகளிருக்குக் கட்டணம் இல்லாமல் பேருந்தில் செல்ல அனுமதி,
மகளிர் ஊக்கத்தொகை வழங்கும் விழாவுக்கு முன்பாகவே மகளிருக்கு ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது, அனைத்து பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: அம்மா உணவக சாப்பாட்டில் கிடந்த அரணை: அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்!
அதிமுகவில், பல அணிகள் இருக்கின்றது. ஓபிஎஸ் அணி, இ பி எஸ் அணி, தீபா அணி, தீபாவின் டிரைவர் அணி, இன்று கூட நான் தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என கிளப்பியுள்ளார். விரைவில் அவர் அதிமுகவை அபகரிப்பார். அதிமுகவில் மற்றொரு அணி உள்ளது. அது பாஜக அணி. நமது இந்தியா கூட்டணி போல வெற்றி கூட்டணியாக மணமக்கள் இருக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி, கோவை பொறுப்பு அமைச்சர் முத்துச்சாமி, செய்தித்துறை அமைச்சர் வெள்ள கோவில் சாமிநாதன், போக்குவரத்துத் துறை அமைச்சர் சங்கர், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, சென்னையில் இருந்து விமான மூலம் கோவை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழி நெடுகிலும் திமுகவினர் சிறப்பு வரவேற்பாக நடனம் ஆடியும், பாரம்பரிய வீர விளையாட்டுகளான சிலம்பம், சுருள் வீச்சுடனும், வரவேற்பு பதாகைகளை ஏந்தியபடியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடக்கம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!