கோயம்புத்தூர்: கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவை அரசு மருத்துவமனையில் ரூபாய் 1.02 கோடி மதிப்பில் கட்டண சிகிச்சை வார்டை திறந்து வைத்தார். பின்னர், ரூபாய் 18 லட்சம் மதிப்பில் CSR நிதி பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, ரூபாய் 15.44 லட்சம் மதிப்பில் விஷமுறிவு அவசர சிகிச்சைக்கான மாநில பயிற்சி மையத்தை திறந்து வைத்து, பாம்புக்கடி நச்சுமுறிவு சிகிச்சைக்கான பயிற்சிகள் வழங்குவதைப் பார்வையிட்டார். தொடர்ச்சியாக நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூபாய் 8.86 லட்சம் மதிப்பில் மாரடைப்பினால் ஏற்படும் உயிரிழப்பினைத் தடுக்கும் இதயப் பாதுகாப்பு மருந்துகளை வழங்கினார்.
இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நிதி நிலை அறிக்கையில் 110 அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பினைத் தடுக்க இதயப் பாதுகாப்பு மருந்து வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. கோவை மதுக்கரை மலுமிச்சம்பட்டி கிராமத்தில் இந்தத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. 8713 துணை சுகாதார நிலையங்கள், 2206 ஆரம்ப சுகாதார நிலையங்கள் நகர்ப்புற சுகாதார நிலையங்களிலும் இதய பாதுகாப்புக்கான மருந்து கையிருப்பு வைக்கப்படும். தமிழகம் முழுவதும் ரூபாய் 3 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
பாம்பு கடி, நாய் கடி போன்றவற்றுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை, வட்டார அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே மருந்துகள் இருந்தது. தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் என 2286 மையங்களில் பாம்பு கடிக்கும், நாய் கடிக்கும் மருந்துகள் இருப்பு உள்ளது.
மேலும் பாம்பு கடி, நாய் கடியால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க 30 ஆயிரம் செவிலியர்களுக்கு விஷக்கடிக்கான பயிற்சி கோவை அரசு மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம், கோவை அரசு மருத்துவமனை மாநில அளவிலான பயிற்சி மையமாக அங்கீகாரம் பெறுகிறது.
கோவையில் 26 அறைகளுடன் கூடிய கட்டண சிகிச்சை அறை துவங்கப்பட்டுள்ளது. மதுரை, சேலம், கோவை ஆகிய இடங்களில் கட்டண வார்டு துவங்கப்படும் என கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்து, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து தற்போது கோவையிலும் துவங்கப்பட்டுள்ளது.
சூப்பர் டீலக்ஸ், டீலக்ஸ், சாதாரண வார்டு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண வார்டுக்கு ரூ.1200, டீலக்ஸ் வார்டுக்கு ரூ.2000, சூப்பர் டீலக்ஸ் வார்டுக்கு ரூ.3000 என வசூலிக்கப்படுகிறது. மேலும், ஹெல்ப் டெஸ்க் உருவாகி, கோவை அரசு மருத்துவமனையில் நான்கு இடங்களில் ஹெல்ப் டெஸ்க் வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளன.
தமிழகத்தில் முதலமைச்சர் நகராட்சி, மாநகராட்சி என பிரித்து நகர்ப்புற நல வாழ்வு மையங்களை துவங்கி வைத்துள்ளார். 708 மையங்கள் துவங்கி வைக்க முடிவெடுத்து ஓராண்டில் 500 மையங்கள் கட்டப்பட்டுள்ளன. கோவையில் 65 மையங்கள் திறக்க முடிவு எடுத்து 49 மையங்கள் முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார்.
18ஆக இருந்த அரசு தலைமை மருத்துவமனைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 25 மருத்துவமனைகளாக உயர்ந்துள்ளன. செவிலியர் பயிற்சி கல்லூரிகள் ஆறு இருந்த நிலையில், புதிதாக 11 செவிலியர் பயிற்சி கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் கோவை பெரிய அளவில் பயன்பாட்டினைக் கொண்டுள்ளது.
காப்பீடு திட்டம் தொடர்பாக புகார்கள் இருந்தால் தகவல் தெரிவியுங்கள். நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துகளின் போது உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு உலகத்திலேயே முதல் திட்டம் இன்னுயிர் காப்போம் திட்டம். இந்தத் திட்டத்தை சரியாக தெரிந்து கொள்ளாதவர்கள் குறை சொல்கின்றனர். WHO (World Health Organization) இந்த திட்டத்தை பாராட்டியுள்ளது.
என்.எச்.எம் தனியாக செயல்படாது. அது சுகாதாரத் துறையின் அங்கம். கடந்த இரண்டு ஆண்டுகளில் டெங்கு, மலேரியா போன்ற பாதிப்புகள் மாநகராட்சி நகராட்சிகளின் நடவடிக்கைகளால் குறைந்துள்ளது. 4300 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 1021 மருத்துவர்களை நிரப்ப நேர்காணல் நடத்த அழைப்பு கொடுத்து 25 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இதன் பொது தேர்வுக்கான முடிவுகள் இன்னும் 15 நாட்களில் வெளிவரும். அதன் பின் 1021 மருத்துவர்களும், 980 மருந்து ஆளுநர்களும் என ஒரே நாளில் 2000 பேருக்கு முதலமைச்சர் பணி ஆணைகளை வழங்குவார். காலிப் பணியிடங்கள் நிரப்பத் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய அளவிலான வழிகாட்டுதலின்படி பணி நியமனங்கள் நடைபெறுகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Gut Health: இந்த உணவு வகைகளை தவறியும் சாப்பிடாதீங்க - குடல் ஆரோக்கியம் அவ்வளவுதான்!