கோயம்புத்தூர்: கோவை மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்ட இடங்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் நேற்று (நவ.10) நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கன மழை பெய்து வருகிறது. கனமழையால் செல்வபுரம் பகுதியில் உள்ள செல்வசிந்தாமணி குளம் நிரம்பியுள்ளது. இதனால், அப்குதியில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக, அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னர் மற்றும் செல்வசிந்தாமணி குளம் ஆகிய பகுதிகளில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டமானது அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “கனமழை காரணமாக கோவையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இங்குள்ள வாய்க்கால்களை அகலப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அவிநாசி பழைய மேம்பாலம் அருகே பெரிய அளவில் ஆழ்துளைக் கிணறு வெட்டி, புதிய மின் மோட்டார் அமைத்து தண்ணீரை வெளியேற்றும் திட்டமும் உள்ளது.
ஏழு இடங்களில் இருந்து படிப்படியாக வரக்கூடிய தண்ணீரை, முறைப்படி குளங்களில் சேர்ப்பதற்கான திட்ட அறிக்கையையும் தயாரித்துள்ளோம். அதற்காக முதலமைச்சர், நிவாரண நிதியில் இருந்து நிதியைப் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார். கோவையில் நீர்வளத்துறை சார்பாக, பல இடங்களில் தூர்வாராமல் இருந்த பகுதிகளில் தூர்வாரவும் வலியுறுத்தப்பட்டு விரைவில் இந்த பணிகள் துவங்க உள்ளது. இப்போது செய்யும் இந்த பணிகள் எப்போதும் பயன் அளிக்கும் வகையில் செய்யப்பட உள்ளது.
தற்போது மழை பெய்தால், ஆங்காங்கே மின்மோட்டார் அமைத்து, சென்னையில் செய்வது போன்று கோவையிலும் மக்கள் பாதிக்காத அளவிற்கு பணிகளை மேற்கொள்ள உத்தரவு தரப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான மோட்டாரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளது. செல்வசிந்தாமணி குளத்தை பொறுத்தவரையில், சாலையை அகலப்படுத்தி மேலே கான்கிரீட் போட்டு, கீழே தண்ணீர் போகும் அளவிற்கு 50 கோடி மதிப்பீட்டில் திட்டம் முன்வைத்துள்ளனர். அதன்படி அங்கு வாய்க்கால்கள் அகலப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், நீர்வளத்துறையின் சார்பாக, ஒரு வாய்க்கால் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுத் தூர்வாரும் பணிகளைச் செய்து வருகிறோம். இந்நிலையில், நகரத்தில் இருக்கக்கூடிய வாய்க்கால்களையும் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளோம். மாநகராட்சி பணிகளைச் செய்யவில்லை என்றால் நீர்வளத் துறை சார்பில், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் பணிகள் செய்யப்படும்.
அதனைத்தொடர்ந்து, கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட மூன்று இடங்களிலும், உணவு உள்ளிட்ட நிவாரண பணிகள் வழங்கப்பட்டுள்ளது. பத்து நாட்களுக்குள் கோவையில் எங்கும் தண்ணீர் தேங்காத வகையில் வாய்க்கால்கள் தூர்வாரப்படும். தண்ணீர் உள்ளே இருக்கக்கூடிய ஆகாயத்தாமரையும், தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள ஆகாயத்தாமரையும் அகற்றப்படும்.
சாலை போடுவதற்காக ரூ.200 கோடி முதலமைச்சர் கொடுத்துள்ளார். 208 சாலைகள் போடாமல் இருந்த நிலையில், தற்போது அவை அனைத்தும் போடப்பட்டு வருகிறது. பாதாளச் சாக்கடை திட்டம், குடிநீர் இணைப்பு, சூயஸ் குடிநீர் திட்டப் பணிகளுக்காகச் சாலைகள் சேதப்படுத்தப்படுகிறது. அவற்றைக் கண்காணித்து, சாலைகள் தரமாக இல்லை என்றால் அவை முறையாக ஆய்வு செய்யப்பட்டு தரம் உறுதி செய்யப்படும்.
டிசம்பர் மாதத்திற்குள் வாலாங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முடிவடையும். நிரந்தர தீர்வு காண பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்குக் கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புடைய சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்!