நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள கரோனா ஊரடங்கால், கடந்த 35 நாள்களுக்கு மேலாக தமிழ்நாடு - கேரள எல்லைகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக வாளையாறு சோதனைச்சாவடியில் சுமார் 48 சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நாமக்கலிலிருந்து 18 தொழிலாளர்கள், குருமிளகு விவசாயப் பணிகளுக்காக கேரளாவிற்கு சென்றுள்ளனர். குருமிளகுப் பணிகள் முடிந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் கேரளாவில் உள்ள முகாம்களில் இவர்கள் தங்கி வந்துள்ளனர்.
தொடர்ந்து தங்கள் குடும்பத்தினரை பார்க்காமல், முகாம்களில் தாக்குப்பிடிக்க முடியாத 18 தொழிலாளர்களும், பாலக்காட்டில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதி வழியாக நடந்தே நாமக்கல் செல்ல முடிவெடுத்து, பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், கோவை தொண்டாமுத்தூர் அருகே வரும்போது வழி தவறி, வெள்ளருக்கன் பாளையம் கிராமத்திற்குள் நுழைந்த இவர்களை, ரோந்து பணியில் இருந்த தொண்டாமுத்தூர் காவல் துறையினர் மீட்டு, அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து இணையதளம் வழியாக இ-பாஸ் விண்ணப்பித்துள்ள இவர்கள், தனி வாகனம் மூலம் இன்று சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
இதையும் படிங்க : தாய்லாந்து சென்ற சிறப்பு விமானத்தில் 220 பேர் பயணம்!