கோவை மாவட்டம் சூலூர் ஏரோ கிளப் சார்பில் கொங்கு கல்யாண மண்டபத்தில் ஓணம் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கேரள நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், தமிழ்நாட்டிலிருந்து அனைத்து பொருட்களையும் கேரளாவிற்கு தமிழ்நாடு மக்கள் தாராளமாக அனுப்பி வைக்கின்றனர். அதேபோல், தமிழ்நாட்டிற்குத் தேவையான தண்ணீரை பாகுபாடின்றி திறந்துவிட கேரள அரசு உதவ வேண்டும் என வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேரள நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி;" தமிழ்நாட்டில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக கேரள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்மாடு மக்கள், கேரள மக்கள் என்று எந்த வித்தியாசமும் பார்ப்பதில்லை. சிறுவாணி தண்ணீர் பிரச்னை குறித்து வருகின்ற 26ஆம் தேதி தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்கள் சந்தித்து பேச உள்ளனர். அப்போது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும்" என்று கூறினார்.