கோயம்புத்தூர்: சர்பாசி சட்டத்தை செயல்படுத்திய மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், சிறு குறு தொழில் முனைவோரிடம் கடனை வசூலிக்கிறேன் என்ற பெயரில் கொடூரமான முறையில் நடந்து தனியார் வங்கியைக் கண்டித்தும், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தனியார் வங்கிகள் கடன் வசூல் என்ற பெயரில், சிறு தொழில் முனைவோரை வதைக்கக் கூடாது. Dromos Shafts நிறுவனத்திற்கு நியாயம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டடோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், “சிறு, குறு தொழில் முனைவோர்களை பாதுகாப்பது என்பது மாநில அரசுக்கும், மத்திய அரசிற்கும் பொதுவான ஒன்று. தமிழ்நாட்டில் அதிக வேலை வாய்ப்பினை கொடுத்து வருகிற சிறு குறு தொழில் முனைவோர்களிடம் அமைச்சர் உள்பட பலரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் வங்கிகள் கடனை வசூலிக்கிறேன் என்ற பெயரில் கொடூரமான முறையில் நடந்து கொள்கின்றனர். ரிசர்வ் வங்கியின் எந்த சட்டத்தையும் அமல்படுத்தாத மத்திய அரசு, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அண்மையில் சர்பாசி சட்டத்தின் கீழ் கோவையில் உள்ள தொழில் முனைவோர் ஒருவரின் சொத்துக்களை முடக்கியுள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்கின்ற பொழுது, தனியார் நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஆட்சியர் கூறிய தகவல் ஏற்புடையதாக அல்ல.
மேலும், சர்பாசி திட்டத்தின் கீழ் சொத்துக்களை முடக்குவதற்காக செல்லும்போது காவல்துறையினர் பாதுகாப்பிற்காக செல்கின்றனர். இது மாவட்ட ஆட்சியருக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. அதுமட்டும் இல்லாமல், சிறு குறு தொழில்களை பாதுகாப்பதற்கு பதிலாக, மாவட்ட ஆட்சியர் அதனை அழிக்கின்ற நடவடிக்கையாக இருக்கும் தனியார் வங்கி நிறுவனங்களுடன் நிற்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. இதனை வன்மையாக கண்டிக்கிறது.
தனியார் வங்கி நிர்வாகிகளும், ஏலம் எடுப்பவர்களும் சேர்ந்து கள்ளக் கூட்டு என்ற வகையில் மிக வேகமாக செயல்பட்டு வருகின்றனர். மத்திய அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிறுமிக்கு போலீசார் கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற விவகாரம்; தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை!