கோவை ஆனைகட்டி வனப்பகுதியில் நவம்பர் 9ஆம் தேதி மாவோயிஸ்ட் தீபக் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டின் காலில் காயம் ஏற்பட்டிருந்ததால் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தீபக்கை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி தடாகம் காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மாவோயிஸ்ட் தீபக் தரப்பில் ஆஜரான மூத்த வழகறிஞர் ப.பா.மோகன், அவரை நேரில் சந்தித்து பேசிய பின்னர்தான் பதில் மனு தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து மனு மீதான விசாரணையை பிற்பகல் மூன்று மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதி சக்திவேல் , வழக்கறிஞர் ப.பா.மோகன் மற்றும் குழுவினரை தீபக்கை சந்திக்க அனுமதியளித்தார். உத்தரவின் அடிப்படையில், நீதிபதியின் உத்தரவு ஆணையுடன் அரசு மருத்துவமனைக்கு வழக்கறிஞர் குழுவினர் சென்றனர். ஆனால், மருத்துவமனை நிர்வாகமும், சிறைத் துறை அலுவலர்களும் மாவோயிஸ்ட் தீபக்கை சந்திக்க அனுமதியளிக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனையடுத்து பிற்பகல் மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்த வழக்கறிஞர் ப.பா.மோகன், நீதிபதி சக்திவேலிடம் இதுகுறித்து முறையிட்டார். இந்நிலையில் அரசு தரப்பில் மாவோயிஸ்ட் தீபக்கை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற மனுவை காவல் துறையினர் திரும்பப் பெறுவதாக நீதிபதியிடம் முறையிட்டனர். அதன் பேரில் காவல் துறையின் மனுவை நீதிபதி சக்திவேல் தள்ளுபடி செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தீபக் தரப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன், "குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கறிஞரை சந்திப்பது என்பது அடிப்படையான உரிமை. தீபக்கை கோவை காவல் துறை திட்டமிட்டு பிடித்து தாக்கி அவரை காயப்படுத்தியுள்ளனர். அவரது உயிருக்கு காவல் துறையால் ஆபத்து இருக்கிறது என்பதை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளோம் என வழகறிஞர் ப.பா.மோகன் தெரிவித்தார்.
நீதிமன்றம் உத்திரவு வழங்கியும் சந்திக்க விடாமல் இருந்த அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர், சிறைத்துறை அலுவலர் உட்பட அரசு அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாவோயிஸ்ட் தீபக்கை சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு காவல் துறையினர் மாற்றியுள்ளனர்.