கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் முருகேசன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாகப் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு ஆயத்தீர்வை அலுவலருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ஆய்வாளர் பாலமருகன், உதவி ஆய்வாளர் ராஜபிரபு அடங்கிய குழு மது வாங்க செல்வதுபோல் சென்று ஆய்வு செய்ததில், 1,750 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து முருகேசனை கையும் களவுமாகப் பிடித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முருகேசன் குடும்பத்துடன் இடையர்பாளையம் கே.கே. நகர் பகுதியில் வசித்து வருவதும், அதே பகுதியில் குடோன் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் காலியான மதுபாட்டில்களைச் சேகரித்து அதனை மது தயாரிப்பு ஆலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இவர் கோவை மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மது வாங்கி, குடோனில் வைத்து ஊரடங்கு காலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதன்பின்னர் அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: போலீசையே மிரட்டும் காங்கிரஸ் பிரமுகரால் பரபரப்பு - வைரலாகும் வீடியோ