தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதிகளில் வாயில் காயத்துடன் 30 வயது மக்னா யானை ஒன்று கடந்த ஒரு மாதமாக சுற்றித் திரிகிறது. இரு மாநில வனத் துறையினரும் இந்த மக்னா யானையைக் கண்காணித்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
மருதமலை, தடாகம், மாங்கரை, ஆனைக்கட்டி என இரு மாநில வனப்பகுதியிலும் சுற்றித் திருந்த இந்த மக்னா யானை, இப்போது மாங்கரை வனப்பகுதியில் சுற்றித் திரிகிறது. இந்த யானையைப் பின் தொடரும் வனத்துறையினர், பழம், உணவுப் பொருள்களில் மருந்து வைத்து யானைக்கு அளித்து, அதன் காயத்திற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்னா யானை நேற்று மாலை மாங்கரை வனத்துறை சோதனைச்சாவடி அருகில் உள்ள சிறப்பு அதிரடிப்படை முகாமிற்குள் நுழைந்தது. அங்கிருந்த உணவுப் பொருள்களை எடுத்து சாப்பிட்டபடி பொருள்களை சேதப்படுத்தியது.
இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், வாகன நிறுத்துமிடத்தில் இருந்து யானையை வெளியே விரட்டி வந்து, பட்டாசுகள் வெடித்தும், ஜீப் மூலம் சத்தம் எழுப்பியும் யானையை விரட்டினர்.
யானையைப் பின்தொடரும் கோவை வனத்துறையினர், பழங்களில் மருந்து வைத்து வாயில் உள்ள காயத்திற்கு சிகிச்சையளிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வட்டாட்சியரை அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்த இளைஞர் கைது